மாதகல் சென் தோமஸ் ஐக்கிய விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட மாதகல் பிறீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டமும் பரிசளிப்பு நிகழ்வும்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2022
மாதகல் புனித தோமையார் திருவிழாவை முன்னிட்டு மாதகல் சென் தோமஸ் ஐக்கிய விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட மாதகல் பிறீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டமும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்றைய தினம்(03.07.2022) கழக மைதானத்தில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அருட்பணி செ. றோய் பேடினன்ட் அடிகளாரும்(மாதகல் பங்கின் பங்குத்தந்தை) சிறப்பு விருந்தினராக அருட்சகோதரி ஜோகராணி ராஜரட்ணம்(தலைவி, அன்புக் கன்னியர் மடத்தலைவி)அவர்களும் கெளரவ விருந்தினராக திரு. அ. பிறேமதாஸ்(பிரதிக் கல்விப் பணிப்பாளர் கல்வித் திட்டமிடல் வலயக் கல்வி அலுவலகம் மன்னார்) ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
நட்பு ரீதியான உதைபந்தாட்ட போட்டியில் சென் தோமஸ் ஜக்கிய விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கீரிமலை சிவானந்தா விளையாட்டுக் கழகம் விளையாடியது. இப்போட்டியின் முதல் பாதி நிறைவில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல் அடித்து சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் மேலும் ஒரு கோல் போட்டு 02:01 என்ற கோல் கணக்கில் சென் தோமஸ் ஜக்கிய விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
விறுவிறுப்பிற்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கும் பஞ்சமில்லாத வகையில் நடாத்தப்பட்ட மாபெரும் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டியில் லூர்து மாதா அணியை எதிர்த்து மடு மாதா அணி மோதியது. இப்போட்டியின் முதல் பாதி ஆட்டம் கோல் எதுவும் இல்லாமல் சமநிலையில் நிறைவு பெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே லூர்து மாதா அணி சார்பில் நிவே கோல் அடிக்க லூர்து மாதா அணி முன்னிலை வகித்தனர். சில நிமிடங்களில் மடு மாதா அணி சார்பில் நிறோசன் கோல் அடிக்க ஆட்டம் மேலும் ரசிகர்களை ஈர்த்தது.
இரண்டாவது பாதி ஆட்டமும் சமநிலையில் நிறைவு பெற மேலதிக நேரம் கொடுக்கப்பட்டு அதில் மடு மாதா அணிக்காக நிசாந்தன் கோல் போட பதிலுக்கு லூர்து மாதா அணி சார்பில் திலீபன் கோலை பதிவு செய்தார்.
இறுதியில் வெற்றியை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட தண்ட உதையில் மடு மாதா அணியினர் 04:01என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தையும் ரூபா 50000.00 பணப் பரிசினையும் கைப்பற்றி கொண்டனர்.
தண்ட உதை வரை போட்டியை விறுவிறுப்பாக வழங்கி இரண்டாம் இடத்தையும் ரூபா 30000.00 பணப்பரிசினையும் லூர்து மாதா அணியினர் பெற்றுக் கொண்டனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக மடு மாதா அணியின் வீரர் நிறோசன் தெரிவு செய்யப்பட்டார்.
சிறந்த கோல் காப்பாளராக லூர்து மாதா அணியின் வீரர் கொன்சன் தெரிவு செய்யப்பட்டார்.
இச்சுற்றுப்போட்டியின் சிறந்த தொடர் நாயகனாக லூர்து மாதா அணி வீரர் திலீபன் தெரிவு செய்யப்பட்டார்.
வெற்றியீட்டிய அணியினருக்கும் மிகத்திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏனைய அனைத்து அணியினருக்கும் வீரர்களுக்கும் மாதகல்.கொம் இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களை கூறி நிற்கின்றோம்.