மாதகல் காணி மீட்புக்கு போராடியவரே படகு விபத்தில் கொல்லப்பட்டார் ; சக மீனவர்கள் குற்றச்சாட்டு 11-01-2022
பிரசுரிக்கபட்ட திகதி: 11/01/2022
மாதகல் காணி மீட்புக்கு போராடியவரே படகு விபத்தில் கொல்லப்பட்டார் ; சக மீனவர்கள் குற்றச்சாட்டு
மாதகல் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவரே படகு விபத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேற்றைய தினம் இரவு மீன்பிடிக்கச்சென்ற மாதகல் பகுதி மீனவர் ஒருவர் (எட்வேட் மரியசீலன் -வயது 31) இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் குறித்து சக மீனவர்கள் மற்றும் உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில்
இன்று காலை 06.30 மலையளவில் தொழிலில் இருந்து கரைக்கு திரும்பும் போது, மாதகல் படகு மீது கடற்படையின் ரோந்து படகு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என கடற்படையினர் எமக்கு தெரிவித்தனர்.
அத்துடன், மாதகல் கடலில் சடலமாக மீட்கப்பட்ட நபர் வீடு திரும்பாத நிலையில் அவரை தேடி நாம் சென்றபோது எம்மை கடற்படையினர் மிரட்டி அனுப்பினார்கள்.
பின்னர், கடலின் கரையோரத்தில் அவரது சடலம் தலையில் பலத்த காயங்களுடன் கிடப்பதாக சிலர் தெரிவித்ததை அடுத்து நாம் அப்பகுதிக்கு சென்று சடலத்தை பார்த்தோம்.
மேலும், அவ்விடத்திற்கு வந்த கடற்படையினர் இந்திய ரோலர் படகு மோதியதினாலையே குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவித்தனர்.
ஆனால், குறித்த விபத்து இடம்பெற்ற இடத்திற்கு இந்திய இழுவை படகு நுழையவே முடியாது.கரையில் இருந்து 200 மீற்றர் தூரத்தில், கடலின் அடியில் பாறை காணப்படும்,ஆகவே பாரிய படகுகள் இங்கு அண்மையாக வர முடியாது.
அதேவேளை, உயிரிழந்தவர் கடந்த காலங்களில் இடம்பெற்ற மாதகல் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஆவார்.
கடலில் தொழிலுக்கு செல்லும் நமக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை, பாதுகாப்பு தரவேண்டியவர்களுக்கு பயந்தே கடலுக்கு செல்ல வேண்டும் என்றால் நாம் எங்கு போவது எவ்வாறு தொழில் செய்வது? பாதுகாப்புக்கு வருபவர்களே , படகால் மோதி எம்மை சாகடிக்கிறார்கள் என மேலும் குற்றம் சாட்டியுள்ளார். (samukam media)
படகு விபத்தில் மாதகல் மீனவர் உயிரிழப்பு; கடற்படை மீது மக்கள் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் மாதகல் கடல் பரப்பில் மீனவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் எட்வேட் மரியசீலன்,(வயது 37) என தெரியவருகிறது.
சடலமாக மீட்கப்பட்ட மீனவர் மாதகல், குசுமாந்துறையை சேர்ந்தவர் என்றும், அவர் பயனித்த படகு கடல் பரப்பில் சுமார் 200 மீற்றர் தூரத்தில் இருந்து,சக மீனவர்களால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மீனவரின் படகு மீது, இன்று அதிகாலை கடற்படையின் ரோந்து படகு மோதி, அவர் உயிரிழந்து இருக்கலாம் என சக மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், குறித்த குற்றச்சாட்டை கடற்படை மறுத்துள்ளது.
இந்த நிலையில் சடலத்தை சுற்றிவர மீனவர்கள், உறவினர்கள் சூழ்ந்து உள்ளனர்.
மேலும் இந்திய ரோலர் படகு மோதியே குறித்த நபர் உயிரிழந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
கரையில் இருந்து 200 மீற்றர் தூரத்தில், கடலின் அடியில் பாறை காணப்படும், ஆகவே பாரிய படகுகள் இங்கு அண்மையாக வர முடியாது, கடற்படையே குறித்த மீனவரை மோதி கொலை செய்துள்ளது. இன்னும் எத்தனை பேரை "நேவி" கொலை செய்ய போகுதோ தெரியவில்லை என மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். (samukam media)