மாதகலில் விகாரை அமைப்பதற்காக காணி சுவீகரிப்புக்கு முயற்சி - தடுத்து நிறுத்த 29ஆம் திகதி அணிதிரளுமாறு அழைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2021
மாதகலில் விகாரை அமைப்பதற்காக காணி சுவீகரிப்புக்கு முயற்சி - தடுத்து நிறுத்த 29ஆம் திகதி அணிதிரளுமாறு அழைப்பு
வலி.தென்மேற்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் விகாரை அமைப்பதற்காக காணி சுவீகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதைத் தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலி.தென்மேற்குத் தவிசாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது வலி.தென்மேற்குப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மாதகல் மேற்கு j/152 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கடற்படை அக்போ பிரிவில் விகாரை அமைப்பதற்காக காணி சுவீகரிக்கப்படவுள்ளது.
காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 29ஆம் திகதிமுதல் நடைபெறவுள்ளன என்று நில அளவைத் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காணி சுவீகரிப்பைத் தடுக்கும் நோக்கில் பிரதேச மக்களுடன் இணைந்து 29ஆம் திகதி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் சுவீகரிக்கப்படுவதைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 29ஆம் திகதி காலையில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்புப் போராட்டத்தில் பேதங்கள் இன்றி அனைவரும் ஒன்று திரள வேண்டும் - என்றார்.
இது குறித்து மாதகல் பிரதேச சபை உறுப்பினர் திருமதி. வா. சிவனேஸ்வரி அவர்களும் பின்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
எமது பிரதேசத்தில் த.152 கிராமசேவையாளர் பிரிவு மாதகல் மேற்குப் பகுதியிலே எதிர்வரும் 29.11.2021 அன்று காலை சுமார் 1483 ஏக்கர் காணியினை நில அளவை திணைக்களத்தினரால் அளவீடு செய்து கடற்படையினருக்கு சொந்தம் ஆக்கப்படும்.
இதை நாம் மக்கள் ஒன்று சேர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும் எமது பூர்வீக நிலங்களை நாம் பறி கொடுக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
சங்கமித்தை வந்து இறங்கிய இடம் எமது அடையாளம் இதை நாம் இன்று தடுத்து நிறுத்தாது விட்டால் இன்னும் பல ஏக்கர் காணி பறிபோகும் நிலை அதுமட்டுமல்ல பல விகாரைகள் புத்தர் சிலைகளும் எமது மாதகல் மண்ணில் வரப்போகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இதை தடுத்து நிறுத்த அனைத்து மக்களின் ஒத்துகழைப்பை வேண்டி நிற்கின்றோம்.
இதே வேளை இம்மாதம் 17 ஆம் திகதியும் இதே பிரதேசத்தில் கடற்படையினருக்காக நில அளவைத்திணைக்களத்தினரால் அளக்க முற்பட்டவேளை பொது மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.