மாதகலில் விகாரை அமைப்பதற்காக காணி சுவீகரிப்புக்கு முயற்சி -
மக்களின் பலத்த எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2021
மாதகலில் விகாரை அமைப்பதற்காக காணி சுவீகரிப்புக்கு முயற்சி -
மக்களின் பலத்த எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது
மாதகலில் தனியாருக்கு சாெந்தமான காணிகளில் கடற்படை அக்போ பிரிவில் விகாரை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. எனினும் மக்களின் பலத்த எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வலி.தென்மேற்குப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மாதகல் மேற்கு து.152 மற்றும் மாதகல் கிழக்கு து.150 கிராம அலுவலர் பிரிவுகளில் தனியாருக்கு சாெந்தமான காணிகளில் கடற்படை அக்போ பிரிவிற்கு நில விஸ்தரிப்பிற்கும் மற்றும் விகாரை அமைப்பதற்கு நில அளவைத் திணைக்களத்தால் காணிகளை அளப்பதற்கு நடவடிக்கைகள் இன்று (29/11/2021) மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தாெடர்ந்து அங்கு திரண்ட மக்களின் எதிர்ப்பால் குறித்த நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகண சபை உறுப்பினர்கள். பிரதேச சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு தமது பலத்த எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இதனால் காணிகளை அளப்பதற்காக வருகை தந்திருந்த நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.
இதே வேளை இம்மாதம் 17 ஆம் திகதியும் இதே பிரதேசத்தில் கடற்படையினருக்காக நில அளவைத்திணைக்களத்தினரால் அளக்க முற்பட்டவேளை பொது மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.